# 001 சதுரங்கம் (Chess) பெருங்கடலில் முத்தெடுக்க வருகிறீர்களா ?
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
போசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன்கதைஅரோ
- – கவிச் சக்ரவர்த்தி கம்பர்
குற்றம் இல்லாத வெற்றியை உடைய இராமனின் கதையை ஆவலுடன் சொல்லப்போவது ஒரு பூனை, ஓசை மிகுந்த சிறந்த பாற்கடலை அடைந்து அதில் உள்ள பால் அனைத்தையும் நக்கியே குடிக்க முற்பட்டதுபோல இருக்கிறது என்கிறார் கம்பர்.
சதுரங்கத்திற்கும் கம்ப இராமாயணத்திற்கும் என்ன தொடர்பு இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? சதுரங்கம் பற்றி எழுத ஆரம்பித்த உடன் என் நினைவிற்கு வந்தது இதுதான். உடனே கம்பருக்கு இணையாக என்னைக் கம்பேர் செய்து கொள்வதாக எண்ணவேண்டாம். பாற்கடலைக் குடிக்க நினைத்த பூனையாகவே நினைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
chess – a game played by two people on a square board, in which each player initially has 16 pieces that can be moved in different ways as per the rules defined.
chessboard – a square board divided into 64 smaller squares, half of which are light and half dark in colour, which is used for playing chess (or draughts).
chess set – the 32 pieces half of which are light and half dark in colour used to play the game of chess in a chessboard.
சதுரங்க விளையாட்டின் பெயர்க்காரணம், வரலாறு மற்றபிற விவரங்களைப் பிறகு பார்க்கலாம்.
சதுரங்கத்தை இரண்டுபேர் விளையாடிப் பொழுதைக் கழிக்க ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு என்று இப்போதைக்குச் சொல்லிக்கொள்ளலாம். ஏற்கனவே விளையாடப்பட்ட விளையாட்டுகளைத் தனியாகவே ஒருவர் விளையாடிப் பார்ப்பது, ஒருவரே பலருக்கு எதிராக நேரிலோ (simultaneous) / இணையத்தில் நேரடியாகவோ (online)/(மின்) அஞ்சல் மூலமோ (offline/e-mail/correspondence) விளையாடுவது, பார்க்காமலே விளையாடுவது (blindfold) போன்ற விவரங்களைப் பிறகு பார்க்கலாம்.
விளையாடத் தேவையானவை சதுரங்கப் பலகை (Chess Board) மற்றும் சதுரங்கக் காய்கள் (Chess pieces).விளையாட்டுப் பலகை சதுர (square) வடிவில் இருக்கும். பலகையில் 64 சின்னஞ்சிறு சதுரங்கள் (squares) எட்டுக்கு எட்டு அதாவது 8 வரிசைகளில் (rows), ஒவ்வொரு வரிசையிலும் 8 சதுரக் கட்டங்கள் அடுத்தடுத்து வைக்கப்பட்டு (columns) அமைந்திருக்கும். அடுத்தடுத்த கட்டங்கள் இரண்டு வித்தியாசமான வண்ணங்களில் (பொதுவாகக் கருப்பு – black மற்றும் வெள்ளை – white ) இருக்கும். கட்டங்களின் நிறங்களை அடர் / கருப்பு நிறம் என்றும் வெளிர் / வெள்ளை நிறம் என்றும் கட்டங்களை அடர் / கருப்பு கட்டம் மற்றும் வெளிர் / வெள்ளை கட்டம் என்றும் சொல்வோம்.
முதலில் பலகையை வைத்துக்கொள்ளும் முறையைத் தெரிந்துகொள்வோம். பலகை சதுரமாகவும் கட்டங்கள் இரண்டே இரண்டு வண்ணங்களில் இருப்பதால் பலகையையும் இரண்டே இரண்டு வித்தியாசமான முறையில்தான் வைத்துக் கொள்ள இயலும்.
1. அடர் நிறக்கட்டம் இடப்பக்கம் கீழ்மூலையில் அல்லது
2. வெளிர் நிறக்கட்டம் இடப்பக்கம் கீழ்மூலையில்
எந்த ஒரு விளையாட்டிற்கும் விதிகள் (rules) இருக்கும் அல்லவா? சதுரங்க விளையாட்டின் முதல் விதியாகச் சதுரங்கப் பலகையின் இடப்பக்கம் கீழ்மூலையில் அடர்/கருப்பு கட்டம் இருக்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம்.
x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
பலகை சரியான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
பலகை தவறான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டுமா ? அடர் நிறம் / கருப்பு / black மற்றும் வெளிர் நிறம் / வெள்ளை / white இரண்டையும் எழுதிப் பார்த்தால் எது அகரவரிசைப்படி முதலில் வரும் ? அந்தக் கட்டம் இடப்பக்கம் கீழ்மூலையில் இருக்கவேண்டும்.
பின்னூட்டச் சோதனை
எழுதியவர் லதா நாள் ஜூன் 7, 2007
நேரம் 12:11 பிற்பகல்